search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தனூர் அணை"

    சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 44,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணைக்கு வரும் நீர்வரத்து திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாற்றில் அப்படியே திறந்துவிடப்படுகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வர தொடங்கியது. மேலும் அதிகரித்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 44 ஆயிரத்து 560 கனஅடி நீர் வரத்து தொடங்கி உள்ளது.

    இந்த நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 9 கண்மாய்கள் வழியாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாறு படுகையில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரையின் இருபுறமும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது.

    எனவே தென்பெண்ணையாற்றின் படுகையில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் தண்டோரா மூலம் எச்சரித்துள்ளனர்.

    இந்த நிலையில் தென் பெண்ணையாற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

    ராயண்டபுரம் கிராமத்தின் அருகே ஆற்றின் கரையோரப் பகுதியில் ஒதுங்கிய நிலையில் இருந்த பிணத்தை தண்டராம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாத்தனூர் அணை பகுதியில் நேற்று முன்தினம் 155.4 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மழை குறைந்து காணப்பட்டாலும் கிருஷ்ணகிரி அணை நிரம்பி அதன் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சாத்தனூர் அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அணையின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் அணை மற்றும் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் மற்றும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சாத்தனூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 44,561 கனஅடி தண்ணீர் வருகிறது. புதிய ‌ஷட்டர்கள் பொருத்துவற்காக, பழைய ‌ஷட்டர்கள் அகற்றப்பட்டதால், தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் என 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்பண்ணையாற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள், பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    செண்பகத்தோப்பு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர், குப்பநத்தம் அணையிலிருந்து 2700 கன அடி, மிருகண்டா நதியிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    3 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் செய்யாறு, கமண்டல நாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் வருவாய்த்துறையினர் தங்க வைத்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக, 800-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி, குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளன.

    30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் தாழ்வானப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

    ஏரிகள் மற்றும் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், பிரதான சாலைகளை ஆர்ப்பரித்து கடந்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில், சமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறி ஓலையாற்றில் செல்லும் தண்ணீரானது ஏந்தல் கிராமத்தை சூழ்ந்துள்ளது.

    மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால், கார்-வேன் உள்ளிட்ட வாகனங்கள், பைக் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    சாத்தனூர் அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் 96 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக வலதுபுற கால்வாயில் இருந்து 200 கன அடி தண்ணீரும், இடதுபுற கால்வாயில் இருந்து 150 கன அடி நீரும் கடந்த ஜனவரி 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.

    அன்று முதல் இங்குள்ள புனல் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தண்டராம்பட்டு மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போதும் மற்றும் பாசனத்திற்காக நீர் திறக்கும்போதும் புனல் மின்நிலையம் இயங்கும்.

    தமிழக அரசு 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி ஜனவரி 23-ந் தேதி முதல் வரும் மார்ச் 4-ந் தேதி வரை பாசன நீர் திறக்கப்படும். அந்த 40 நாட்கள் மட்டுமே மின் உற்பத்தியும் இங்கு நடைபெறும். அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி நடக்கிறது.

    பாசனத்துக்காக நீர் திறப்பதற்கு முன் அதாவது ஜனவரி 23-ந் தேதி அணையின் நீர் மட்டம் 96.20 அடி (கொள்ளளவு 3,222 மில்லியன் கன அடி) ஆகும். நேற்று 10 அடி நீர்மட்டம் குறைந்தது. 86.05 அடி (கொள்ளளவு 2,047 மில்லியன் கன அடி) ஆக இருந்தது. இதற்கிடையில் திருக்கோவிலூர் ஆயக்கட்டு பகுதிக்காக 10 நாட்கள் அணையில் இருந்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பு இன்றுடன் நிறுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு இதே நாளில் சத்தனூர் அணை முழுவதும் நிரம்பியிருந்ததால் 95 நாட்கள் பாசன நீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு பருவமழை பொய்த்துப்போனதால் அணையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாசன நீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை தாலுகாவில் 20 ஏரிகளிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் 10 ஏரிகளிலும் 60 சதவீத அளவு நீர் இருப்பு உள்ளது.

    சாத்தனூர் அணையில் 2-ம் போக சாகுபாடிக்கு தண்ணீர் இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும். #SathanurDam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை 119 அடி கொண்டதாகும்.

    தற்போது அணையில் 96.20 அடி தண்ணீர் உள்ளது. அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்து மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சாத்தனூர் ஆணை உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன், செல்வராஜீ மற்றும் மதுசூதனன், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகா திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள 34 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படும் 2 ஆயிரத்து 230 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுகா, சங்கராபுரம் தாலுகாவில் 54 ஏரிகள் பாசன வசதிபெறும். இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும்.

    பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  #SathanurDam

    தொடர் மழை காரணமாக தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #SathanurDam
    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடியாகும். தற்போது அணையில் 96.40 அடி அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதாவது 3.249 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

    சாத்தனூர் அணையை பொறுத்தவரை தென்பெண்ணை ஆற்றில் வரும் மழை வெள்ளம் கல்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழை நீர்ஆகியவற்றையே ஆதாரமாக உள்ளது.

    தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கல்வராயன் மலை தொடர் பகுதியிலும் தென்பெண்ணை ஆற்றிலும் மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சாத்தனூர் அணைக்கு நேற்று முதல் வினாடிக்கு 162 கன அடி நீர் வர தொடங்கி உள்ளது. எனவே நீர்வரத்து படிபடியாக உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றபடவில்லை. #SathanurDam

    தென்பெண்ணையாற்றில் திறந்தவிடப்பட்ட தண்ணீர் அதிகளவு வருவதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 2,463 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1215 கனஅடியாக உள்ளது.
    சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #Sathanurdam #TNCM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2018ஆம் ஆண்டு பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில் முறையே வினாடிக்கு 350 கன அடி மற்றும் 220 கனஅடி வீதம் 5 நாட்களுக்கு கூடுதலாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.



    இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 45000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Sathanurdam #TNCM

    ×